அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் பேரங்களைப் பற்றியது என்று வெளிப்படையாக அறிவித்து கொண்ட ட்ரம்பின் பேரங்களால் சர்வதேச அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? மீண்டும் அமெரிக்காவை உலகின் முதன்மையான நாடாக கட்டமைக்கிறாரா ? அல்லது உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ட்ரம்ப் முடிவுரை எழுதுகிறாரா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் தினமும் புதிய அறிவிப்புக்கள், புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். அவை எல்லாம் உலக ஒழுங்கை தலைகீழாக புரட்டி சீர்குலைத்துள்ளன.
குறிப்பாக, கிரீன்லாந்தை அமெரிக்கா விலை கொடுத்தாவது வாங்கி விடும், கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைப்போம், பனாமா கால்வாயின் உரிமை அமெரிக்காவுடையது என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்புகள், மேற்குலகில் ஒரு புதிய மன்ரோ கோட்பாட்டை ட்ரம்ப் உருவாக்குவதையே காட்டுகிறது.
அமெரிக்க குடியுரிமை தொடங்கி, உக்ரைனுக்கான ஆயுத மற்றும் நிதியுதவி வரை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாக முடிவுகளில் பலவற்றை ட்ரம்ப் ரத்து செய்திருக்கிறார்.
பாலஸ்தீனர்களுக்கு துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் புகலிடம் கொடுக்கவேண்டும், காசாவை அரபு நாடுகளின் சொர்க்கப்புரியாக மாற்றுவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும்,சீனாவின் வர்த்தக முறைகேடுகளைத் தடுக்கவும், சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரிவிதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். பிறகு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை, அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறினார். மேலும், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல், மற்ற நாடுகளுக்கும் பரஸ்பர வரி அமலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.
உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறிய ட்ரம்ப், உக்ரைனையும், பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளைத் தவிர்த்து, சவூதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார்.
அமைதியான முறையில் ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக, அமெரிக்கா வாக்களித்தது. இதன் மூலம், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் கைகழுவியது. இது,அமெரிக்கா ஐரோப்பாவை விட்டு விலகி,ரஷ்யா பக்கம் திரும்புவதை வெட்டவெளிச்சமாகியது.
காசா பிரச்சனையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம், அமெரிக்கா மீது ஐரோப்பா அல்லாத நாடுகள் அதிருப்தி அடைந்தன.
தனது பதவியேற்பு உரையில், அமெரிக்காவின் 25 வது அதிபராக இருந்த மெக்கின்லியை, சிறந்த அதிபர் மற்றும் பிறவி தொழிலதிபர் என்று பாராட்டிய ட்ரம்ப், மெக்கின்லி புதிய வரிவிதிப்பின் மூலம்,செழிப்பான அமெரிக்காவை உருவாக்கினார் என்று கூறியிருந்தார்.
முன்னாள் அதிபர் மெக்கின்லி, அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த இறக்குமதி வரியை கொண்டு வந்தார். 1,500 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியை 49.5 சதவீதமாக உயர்த்தினார். இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. அதனால் அமெரிக்க மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது அமெரிக்கா வரலாறு காணாத பணவீக்கத்தைச் சந்தித்தது.
மெக்கின்லி ஆட்சிக்காலத்தில், வணிகத்தில் ஊழல், நிர்வாகத்தில் குளறுபடி, சமூக கொந்தளிப்பு மற்றும் சமத்துவமின்மை நிறைந்த நாடாகவே அமெரிக்கா இருந்தது.
மெக்கின்லியை தன் முன்மாதிரியாக கொண்டுள்ள ட்ரம்ப்பின் ஆட்சி காலம், மெக்கின்லியின் காலத்தில் காலத்தை விட வித்தியாசமானது.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து மேற்கத்திய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஒரு உலகளாவிய ஒழுங்கை இப்போது ட்ரம்ப் மாற்றியமைத்திருக்கிறார்.
ஐரோப்பாவுடனான நட்புறவை ட்ரம்ப் முறிப்பது, 80 ஆண்டுகால அட்லாண்டிக் கூட்டணியை சீர்குலைக்கவும், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கையும் பலவீனப்படுத்துவும் செய்துவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
நேட்டோ என்ற அமைப்பு, தோல்வியடையும்போது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ கூட்டணி பிளவுபடக்கூடும் என்றும் இது உலகளாவிய அதிகார வெற்றிடத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள். உலக அதிகார வெற்றிடத்தை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் கைப்பற்றக் கூடும்.
அமெரிக்காவின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதில் யானையும் ட்ராகனும் போல இந்தியாவும் சீனாவும் இணைந்து முன்னணியில் இருக்க வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்திருக்கிறது.
ட்ரம்பின் புதிய வெளியுறவுக் கொள்கையால், உலக நாடுகளின் மேல் அமெரிக்காவின் ஆதிக்கம் சரிந்துவிட்டது. அதனுடன் மேற்குலக நாடுகளின் உலகளாவிய கட்டுப்பாடும் தளர்ந்து விட்டது. மேலும் அது, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கே மிகவும் சாதகமாக உள்ளது.
சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி பற்றியும் உலகளாவிய அதிகாரம் ஆசியாவை நோக்கி நகர்வது பற்றியும் என்பதை அறியாதவரல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
சிறந்த பேரம் பேசி நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஒப்பந்ததாரர் போலவேசெயல்படும் ட்ரம்ப் தன்னை மட்டுமே நம்பி, புவிசார் அரசியலில் புதிய சூதாட்டத்தை ஆடுகிறார்.
ட்ரம்பின் இந்த சூதாட்டத்தால், உலகத்தில் 300 ஆண்டுகால மேற்கத்திய ஆதிக்க சகாப்தம் முடிவடையும் என்றும், மீள முடியாத பெரிய பின்னடைவை அமெரிக்கா சந்திக்கும் என்றும், அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.