இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கால் பதிக்க முயற்சி செய்து வந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மூலம், மூன்றுநிறுவனங்களும், தங்கள் சந்தை இருப்பை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்குக்குச் சொந்தமானதாகும். ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய மண்டலம் ஆகும். இதன் மூலம் உலக அளவில், அதி வேக தொலை தொடர்பு சேவைகள் வழங்கப் பட்டு வருகிறது.
குறிப்பாக, உலகின் மூலை முடுக்குகளில் உள்ள தொலை தூர கிராமப் புறம் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. ஸ்டார்லிங்கின் செயற்கைகோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். ஸ்டார் லிங்க் நிறுவனம்,கடந்த ஓராண்டாகவே, இந்திய தொலைதொடர்பு துறைக்குள் வர கடுமையாக முயற்சி செய்து வந்தது.
கடந்த ஆண்டு, செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் முறையில் தான் வழங்கவேண்டும் என்று, இந்திய தொலைதொடர்பு துறையில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்தது. ஏலம் விடுவது தவறான முறை என்றும், உலகம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தான் செய்யப்படுகிறது என்றும் எலான் மஸ்க் தன் வாதத்தை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயற்கைக்கோள் இணைய சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தான் செய்யப்படும் என்று அறிவித்தார். தற்போது யாருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனமும், ஸ்டார்லிங்க் நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இணைய சேவையை வழங்க கைகோர்த்துள்ளன. இனி இந்தியாவில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை ஏர்டெல் ஸ்டோர்களில் வாங்கிப் பயன்படுத்தும் போது, அதிவேக மற்றும் தங்கு தடையில்லாத இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது.
ஏர்டெல்லுக்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்கின் அதிவேக சேவைகளை வழங்க ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு இந்தியரும், எங்கு வாழ்ந்தாலும், மலிவு விலையில் மற்றும் அதிவேக இணைய சேவையைப் பெறுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான (Gwynne Shotwell ) க்வின் ஷாட்வெல், ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான இந்திய அரசின் அங்கீகாரத்துக்குக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS எனப்படும் செயற்கை கோள் இணைய சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்துள்ள டேட்டா மற்றும் தேசிய பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்காமல் இருந்தது.
கடந்த மாதமே, மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டு, இந்தியாவில் ஸ்டார்லிங்கின் சேவைகளை விற்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஒழுங்குமுறை ஒப்புதலை பெறும் என்ற தகவல் கசிந்தது.
இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ-வுடன் ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் மூலம், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் இந்திய சந்தையில் நுழைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல், ஸ்டார்லிங்க் மோதலுக்கு பிறகு, இந்த ஆண்டு,அடுத்தடுத்த நாளில், ஏர்டெல்லும், ஜியோவும், ஸ்டார் லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
மீண்டும் ஏர்டெல்-ஜியோ வர்த்தகப் போட்டி வேகம் அடைந்திருக்கிறது. 4ஜி,5ஜி,6ஜி வரிசையில், ஜியோவும் ஏர்டெல்லும் Sat ஜி களத்தில் இறங்கி உள்ளன.
அம்பானி மற்றும் மிட்டலுக்கு இது வெற்றி ஒப்பந்தமா ? அல்லது எலான் மஸ்குக்கு இது வெற்றி ஒப்பந்தமா ? என்று கேட்டால் , வாடிக்கையாளர்களுக்கான வெற்றி ஒப்பந்தம் என்கிறார்கள்வணிக வல்லுநர்கள்.