டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை, விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு உள்ளதாக கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை பெருமையாக பேசும் இதே அரசுதான் மது விற்பனை செய்கிறது எனவும் ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீர்தான் எனக் குறிப்பிட்டுள்ள விஜய் இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால் டாஸ்மாக் முறைகேட்டில் மட்டும் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே யாராக இருந்தாலும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள தவெக தலைவர் விஜய், எத்தனை கோடிகளை கொட்டினாலும் விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது என கூறியுள்ளார்.