பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையாக ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் வராததால், நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோயில் தெருவை அதிகாரிகள் முற்றிலும் அடைத்து கொட்டகை போல தயார் செய்து எல்இடி திரையை அமைத்தனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த சாலையை அதிகாரிகள் அடைத்து எல்.இ.டி திரையை அமைத்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதே போல, சேலத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதிநிலை அறிக்கை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை அதிகாரிகள் துவக்கி வைத்த நிலையில் 10 நிமிடங்கள் மட்டுமே திமுகவினர் மற்றும் அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து அனைத்து நாற்காலியும் வெறிச்சோடி காணப்பட்டதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்ஜெட் நேரடி ஒளிபரப்பை 3 பேர் மட்டுமே நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்தனர். ஏராளமான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் 3 பேர் மட்டுமே பட்ஜெட் நேரலை ஒளிபரப்பை பார்த்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
இதே போல நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு உட்பட்ட பகுதிகளில் பட்ஜெட் தாக்கல் குறித்த நேரலை ஒளிபரப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் பேருந்திற்காக காத்திருந்த மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறிதும் நேரலையை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
கோவையில் மாநகராட்சி சார்பாக காந்திபுரம் பகுதியில் நிதிநிலை அறிக்கை தாக்கலானது எல்இடி திரை மூலம் திரையிடப்பட்டது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடத்திய வீடியோ காட்சி ஒளிபரப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.