டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? அதற்கு தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து மறுப்பது ஏன்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாடுகளை மற்ற நாடுகளின் நிலப்பரப்புகளை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றுவதும், விலை கொடுத்து வாங்குவதும் அமெரிக்காவுக்கு ஒன்றும் புதிதல்ல.
லூசியானாவை பிரான்ஸிடமிருந்து அமெரிக்கா வாங்கியது. ப்ளோரிடாவை ஸ்பெயினிடமிருந்து அமெரிக்கா வாங்கியது. அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா வாங்கியது. வர்ஜின் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து வாங்கியது. ப்யூர்தொரிகாவை ராணுவ நடவடிக்கை மூலம் ஸ்பெயினிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது அமெரிக்கா.
கிரீன்லாந்து, நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பெற்ற பகுதியாகும். கிரீன்லாந்து தனது மொத்த செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கு செலவுக்கு, டென்மார்க்கையே நம்பியுள்ளது.
இந்தத் தீவில் சுமார் 56,000 மக்கள் வாழ்கின்றனர்.பெரும்பாலோர் கடற்கரையை ஒட்டி வாழ்கின்றனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை கனமான கரையாத பனிப்பாறைகள் மூடியுள்ளன. ஏராளமான அரிய கனிம வளங்களும் இயற்கை எரிவாயும் கிரீன்லாந்தில் உள்ளன.
அரிய வகை தாதுப்பொருட்களின் புதையல் என்று கூறப்படும் கிரீன்லாந்து, ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ளது. குறிப்பாக, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவற்றுடன் அமெரிக்கா தன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
புவியியல் அடிப்படையில் கனடாவும்,கிரீன்லாந்தும் அமெரிக்காவுடன் இணைந்தால், அமெரிக்காவின் நிலப்பரப்பு 2.2 கோடி சதுர கிலோமீட்டராகும். ரஷ்யாவின் நிலப்பரப்பை விட அமெரிக்காவின் நிலப்பரப்பு அதிகமாகும். இப்போது மொத்த ரஷ்யாவின் நிலப்பரப்பு சுமார் 1.7 கோடி சதுர கிலோமீட்டர் ஆகும்.
ஆனாலும், அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டம் நீண்ட காலமாகவே உள்ளது. 1860 ஆம் ஆண்டு, முதல் முறையாக இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டது.
பாதுகாப்புக் காரணத்தால் கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை 1867ஆம் ஆண்டுஅதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 1946 வரை கிரீன்லாந்து குறித்து எந்த நடவடிக்கையும் அமெரிக்கா எடுக்கவில்லை.
ஹென்றி ட்ரூமேன் அதிபராக இருந்தபோது, கிரீன்லாந்துக்கு பதிலாக அலாஸ்காவின் சில பகுதிகளை டென்மார்க்குக்கு வழங்கவும், கூடுதலாக, 100 மில்லியன் டாலர்கள் நிதி வழங்கவும், பரிந்துரை செய்யப்பட்டது. அதிபர் ஹென்றி ட்ரூமேனும் கிரீன்லாந்தை வாங்க தயாராகவே இருந்தார். ஆனாலும் அமெரிக்காவால் கிரீன்லாந்தை வாங்க முடியவில்லை.
2019ம் ஆண்டில்,அதிபராக தனது முதல் பதவிக் காலத்தில் அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்று ,ட்ரம்ப் பரிந்துரைத்தார். மேலும், அந்த திட்டத்தை ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக வடிவமைத்தார். ஆனால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.
பனிப்போரின் ஆரம்பத்தில், வான்பகுதி மற்றும் ரேடார் தளம் ஒன்றை அமெரிக்கா கிரீன்லாந்தில் அமைத்தது. இப்போதும், விண்வெளியைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவின் வட எல்லைப் பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கைகளை இந்த பாதுகாப்புத் தளம் அமெரிக்காவுக்கு உதவுகிறது.
இதற்கிடையே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, உறைந்த ஆர்டிக் கடல் பகுதி போக்குவரத்துக்கு உகந்ததாக மாறி வருகிறது. ஆர்டிக் முக்கிய கடல் வழிப் பாதையும் உருவாகியுள்ளது.
எனவே, உலகளாவிய சக்திகள், ஆர்டிக் மண்டலத்தில், தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக சீனாவும், ரஷ்யாவும் ஆர்க்டிக்கில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளன.
எனவே தான், அமெரிக்கா கிரீன்லாந்து மீது முழு கவனத்தையும் திருப்பியுள்ளது. ஆர்டிக் பகுதியைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை, மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளால் ட்ரம்ப் கூறி வருகிறார்.
இந்தச் சூழலில், கிரீன்லாந்து மீதான பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கீட்டை டென்மார்க் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு செலவுகளுக்காக சுமார் 1.5 பில்லியன் டாலர்களை டென்மார்க் ஒதுக்கியுள்ளது.
அமெரிக்கா, கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. என்ன விலை கொடுத்ததும் கிரீன்லாந்தை வாங்க தயாராக இருப்பதாகவே தெரிகிறது. கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்ற நிலையில், ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றவும் ட்ரம்ப் தயங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, டென்மார்க்கின் கிரீன்லாந்தில் அமெரிக்கா போர் தொடுத்தால் நிச்சயம் நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எதிர் எதிர் அணியாக நிற்கின்றன. இந்நிலையில், கிரீன்லாந்து மீது அமெரிக்கா போர் தொடுத்தால், மூன்றாம் உலக போராக மாறும் வாய்ப்பிருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.