திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகார் மீது ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி டிஐஜி வருண் குமார் மீது நடவடிக்கை கோரி நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், திருச்சி குற்றப்பிரிவு போலீசார் பொய்யான புகாரில் தன்னை கைது செய்து, தனது 2 செல்போன்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஜாமினில் வெளியே வந்த பின்பும் தனது செல்போன்களை வழங்காமல், அதில் இருந்த ஆடியோக்களை திருச்சி டிஐஜி தனது நண்பரின் உதவியோடு இணையத்தில் வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஆளும் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியை நசுக்க முயலும் டிஐஜி வருண்குமார் மீது காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி டிஐஜி வருண்குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டதாக கூறிய நீதிபதி, ஒரு மாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.