புவனகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய விவகாரத்தில், “தமக்கு அமைச்சரைத் தெரியும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள்” எனப் பேசிய ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த உ.ஆதனூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு கலைச்செல்வன் என்பவர் மதுவாங்க சென்றுள்ளார்.
அப்போது, வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது கேட்டுள்ளார். மேலும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஏன் 10 ரூபாய் வாங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். “தமக்கு ஆட்சியர் மற்றும் அமைச்சரைத் தெரியும் என்றும், ஒரு போன் போட்டால் நீ என்ன ஆவாய் தெரியுமா” என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தமது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ, வைரலான நிலையில், மது பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வாங்கிய டாஸ்மாக் கடை விற்பனையாளர் வீரமணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.