தஞ்சாவூரில் கந்துவட்டி புகாரில் கைதான திமுக நிர்வாகி, கடன் பெற்றவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் திமுக மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மதுபான கூடத்தைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
ஆனால் கொரோனா காலத்தில் தொழில் முடங்கிய நிலையில், அவரால் உரிய முறையில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், கொடுக்க வேண்டிய தொகைக்கு கிருஷ்ணமூர்த்தி அதிக வட்டி கேட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பத்மநாபனை கிருஷ்ணமூர்த்தியும் அவரது சகோதரரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பத்மநாபன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், பத்மநாபன் வீட்டிற்கே சென்று கிருஷ்ணமூர்த்தியும் அவரது சகோதரரும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.