இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க கூடாது என சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூர்யமூர்த்தி அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் ஆணையம் விசாரணையை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் சூர்யமூர்த்தி வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுடன் அதிமுக வழக்கில் பிறப்பித்த உத்தரவையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
















