தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக திமுக அரசு மக்களிடையே விஷத்தைப் பரப்புவதாக விமர்சித்த அவர், மொழியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அனைத்து மொழிகளுமே இந்தியத் திருநாட்டின் பொக்கிஷம் தான் என்றும் அவர் தெரிவித்தார். தாங்கள் தென்மாநில மொழிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க திமுக அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டிய அமித்ஷா, தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை எனவும் விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மருத்துவம், பொறியியல் கல்வி தமிழில் கற்பிக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதியளித்தார்.