தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்திய தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேட்டியளித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் அல்ல, ஊழல் மறைப்பு கூட்டம் என விமர்சித்தார்.
அதேபோல, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனது இல்லத்திற்கு வெளியே உள்ள கொடி கம்பத்தில், கருப்பு கொடியை ஏற்றி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமரோ, தேர்தல் ஆணையமோ பேசவில்லை என தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு முன்பு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவினர், கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோன்று, பாஜக மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு, பாஜக நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை தி.நகரில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், தனது இல்லம் முன்பு கருப்புக் கொடியை ஏற்றி தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்துக்கு துரோகம் செய்துவரும் முதலமைச்சர்கள் சென்னை கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.