நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் 3 நாள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு மண்டலம் அல்லது பிராந்தியத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்கு என தெரிவித்தார்.
எபஸ்தி என்பது 10 ஆயிரம் பேரை கொண்ட நகர்ப்புற பகுதி என்றும், 10 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கியது மண்டல் என தெரிவித்த அவர், மண்டல் மற்றும் எபஸ்தியை சென்றடைவதுதான் இலக்கு என்றும் கூறினார்.
அடுத்த 6 மாதத்தில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். வரும் விஜயதசமியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டதாக கூறினார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, நீதிமன்றங்கள் பலமுறை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், அது ஒருபோதும் நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு வரவேற்கத்தக்கது மற்றும் அவசியமானது என்று அவர் தெரிவித்தார்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்ததாகவும், இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கே அளிக்கப்பட வேண்டும் என்றும், மதக் குழுக்களுக்கு அல்ல என்று அவர் கூறினார்.