திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் மீது புகார் அளித்தும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அதிமுக கிளை செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெபமணி சேகர் என்பவர் மெஞ்ஞானபுரம் அதிமுக கிளை செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் ராஜன் என்பவருக்கும் அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மெஞ்ஞானபுரம் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த ஜெபமணி சேகரை, மதுபோதையில் அரிவாளால் வெட்ட முயன்ற ஜெபராஜ் ராஜனைப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிளை செயலளார் ஜெபமணி சேகர், வீடியோ ஆதாரத்துடன் ஜெபராஜ் ராஜன் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
திமுக அமைச்சர்கள் அழுத்தம் காரணமாகச் சாதாரண அடிதடி வழக்கு என பதிவு செய்த போலீசார், உடனடியாக ஜெபராஜை பிணையில் விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டப்பகலில் தன்னை கொலை செய்ய முன்ற ஜெபராஜ், மீண்டும் கொலை செய்ய வருவார் என அச்சத்தில் இருப்பதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக கிளை செயலாளர் ஜெபமணி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.