பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானை முன்னிட்டு பாஜக சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்னை எழும்பூரில் பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் கருநாகராஜன், சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.