ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலையில் சிக்கிய அரியவகை ஆமையை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது. ஆமைகளை பாதுகாப்பதில் மீனவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த ‘ஒப்பிலான்’ கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ரவி சக மீனவர்களுடன் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வலையை விரித்து வைத்திருந்தார். வலையை எடுக்கச் சென்றபோது அரிய வகை ராட்சத பச்சை வகை கடல் ஆமை ராட்சத போயா (மீன்பிடி படகு) வில் சிக்கி இருந்ததை கண்டுள்ளனர்.
கடற்கரை காவல் நிலையத்திற்கும் , மன்னார் வளைகுடா வன உயிரினங்கள் காப்பகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மீனவர்களிடம் கடல் ஆமையை மீட்டு பத்திரமாக கடலுக்குள் மீண்டும் விடும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் அறிவுறுத்தியபடி மீன்பிடி படகுடன் இணைத்து விரிக்கப்பட்டிருந்த வலையை அறுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் பத்திரமாக ஆமையை விட்டுள்ளனர்.