சென்னை வியாசர்பாடியில் வாகன நிறுத்துமிடம், முறையான வடிகால் அமைப்பு, சிசிடிவி கேமிராக்கள் என எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பால் அங்குத் தங்கியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அவசரகதியில் கட்டி முடித்துத் திறக்கப்பட்ட குடியிருப்பின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது இந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு. 13 தளங்களைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தமாக 468 வீடுகள் அமைந்துள்ளன. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுகவால் நான்கு ஆண்டுகள் கழித்துத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பில் எந்தவித அடிப்படைவசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
60 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் மின்தூக்கிகள் முறையாக வேலை செய்யாத காரணத்தினால் 13வது மாடியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், கோடிக் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிசிடிவி கேமிரா கூட பொருத்தப்படாமல் இருப்பது அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது,
போதுமான வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு உபகரணங்கள், முறையான வடிகால் அமைப்பு, குடிநீர் வசதி எனப் பொதுமக்கள் வசிக்கத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவசரகதியில் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பு பொதுமக்கள் வாழத்தகுதியற்ற குடியிருப்பாக மாறி வருகிறது.
சமூக நீதி, சமூக முன்னேற்றம், இது எல்லோருக்குமான அரசு என தங்களை விளம்பரப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, பொதுமக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலுத்த வேண்டும் என்பதே குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.