பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆராட்டு விழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 11-ஆம் தேதி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்க உள்ளது.
தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்குக் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும்.