ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மண்டலங்களில் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். தற்போது வட, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில், வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே திங்கள்கிழமை நாட்டிலேயே அதிகபட்சமாக தெலங்கானாவின் ஆதிலாபாத்தில் 106 டிகிரி பாரன்ஹீட்டும், ஆந்திராவின் அனந்தபூரில் 103.46 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.