குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்று கூறியுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், அதற்கான காரணங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யார் அந்த அமெரிக்க பெண் ? அப்படி என்ன காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்கரான கிறிஸ்டன் பிஷ்ஷர், 2017-ம் ஆண்டு முதல்முறையாகத் தனது கணவருடன் இந்தியாவுக்கு வந்தார். தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வரும் கிறிஸ்டன் பிஷ்ஷர், கண்டெண்ட் கிரியேட்டராக பணிபுரிகிறார்.
அமெரிக்காவில் வசித்ததைவிட இந்தியாவில் வாழ்வது மிகவும் நிறைவாக உள்ளது என்று அவர் கூறிய வீடியோ ஒன்று கடந்த செப்டம்பரில் சமூக ஊடகங்களில் வைரலானது.
நான் ஏன் அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கிறேன் என்ற தலைப்பில் அவர் பதிவிட்ட ஒரு வீடியோவில், அமெரிக்காவில் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட இயல்பு மற்றும் இந்தியாவின் வளமான சமூகம், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை எளிமையாக விவரித்திருந்தார்.
கலாச்சாரம், மற்றும் ஒட்டுமொத்த ஒற்றுமை உணர்வு இந்தியாவில் நிறைந்திருப்பதாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாக இந்தியர்கள் இருப்பதாகவும், குறிப்பாக, எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு உதவ இந்தியர்கள் தயாராக உள்ளதாகவும் கூறிய கிறிஸ்டன் பிஷ்ஷர், தன் குழந்தைகள் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான கலாச்சார வாழ்க்கை வாழ்வதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும்,சைவ உணவை ஏற்றுக்கொள்வது, பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிவது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, தினசரி டீ குடிப்பது, தனது குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிக்கு அனுப்புதல், கைகளால் சாப்பிடுவது, அவசியமான இந்தியைக் கற்றுக்கொண்டு அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது, வீட்டு வேலைகளை கைகளால் செய்வது எனத் தனது வாழ்க்கை முறையை மாற்றிய கிறிஸ்டன் பிஷ்ஷர், இந்தியாவின் வாழ்க்கை முறை சிறந்தது என்றும் கூறியிருந்தார்.
இப்போது, இந்தியாவில் குழந்தைகளை வளர்ப்பதற்கான 8 முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டு, ஒரு பதிவை கிறிஸ்டன் பிஷ்ஷர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவில் வாழ்வது குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துகிறது என்றும், குழந்தைகளுக்கு வெவ்வேறு கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான புரிதலையும், பரந்த மனப்பான்மையையும் வளர்க்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஏராளமான மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளின் தாயகமாக விளங்குகிறது. குழந்தைகள் இந்தி, ஆங்கிலத்துடன் பல மொழிகளையும் கற்றுக் கொள்வதால் பன்மொழி புலமை ஏற்படுகிறது. இது குழந்தைகளின் அறிவாற்றலை வளர்ப்பதோடு, தகவல் தொடர்பு திறன்களையும் மேம்படுத்துகிறது என்றும், இது வேலை வாய்ப்புகளை அதிகமாக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் வளரும்போது, குழந்தைகள் பரந்த உலகக் கண்ணோட்டத்தைப் பெறுவதாகவும், உலகளாவிய பிரச்சினைகள், சவால்கள் மற்றும் மாறுபட்ட சமூக விதிமுறைகளைப் பற்றியும் கற்றுக் கொள்வதாகவும், இது குளோபல் சிட்டிசன் என்ற உலகளாவிய குடியுரிமை குறித்த நுணுக்கமான கண்ணோட்டத்தை வளர்க்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வேறு நாடு, புதிய பள்ளி முறை, உள்ளூர் பழக்கவழக்கம் எனப் பல சவால்களை எதிர்கொள்வதால் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் குழந்தைகள் தாமாகவே பெறுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு சமூக விதிமுறைகள் மற்றும் குடும்ப கட்டமைப்புகள் குழந்தைகளுக்கு அதிக உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்க உதவுகிறது என்றும், பல்வேறு மக்களுடன் தொடர்பு கொள்ளவும், வெவ்வேறு உணர்ச்சி குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும், பச்சாதாபம் மற்றும் சமூக திறன்களை மேம்படுத்தவும் துணை செய்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, தனிப்பட்ட அமெரிக்க வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்று கூறியுள்ள கிறிஸ்டன் பிஷ்ஷர், எளிமை, உள்ளதை வைத்து மகிழும் மன நிறைவு மற்றும் நன்றி உணர்வைப் போற்றும் பண்பு இந்தியாவில் தான் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 70,௦௦௦-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள ஃபிஷர், இந்தியாவில் தனது வாழ்க்கை குறித்துப் பல வைரல் வீடியோக்களை உருவாக்கியுள்ளார். எனினும், அவரது தற்போதைய பதிவுக்கு நெட்டிசன்களின் பாராட்டுகள் குவிந்துள்ளன.