நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டைத் தமிழில் தயாரிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளைத் தமிழில் தயாரிக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளைத் தமிழில் தயாரிக்க அனுமதிப்பது சம்பந்தமாக அரசுக்கு விண்ணப்பம் அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பியும் கடந்த 19 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை எட்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.