டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டதாகவும், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.