தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
நெல்லை வள்ளியூர் பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
இதேப்போன்று, திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி சாலை , பல்லடம் சாலை, வெள்ளியங்காடு நால்ரோடு, ஆண்டிபாளையம் என பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மழை நீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.