திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலையோரமாக இருந்த ராட்சத மரங்கள், இணைய மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஜேசிபி உதவியுடன் ராட்சத மரங்களை அகற்றினர்.
மேலும், பாச்சாங்காட்டு பாளையத்தில் கனமழையின்போது நடந்து சென்ற சாயப்பட்டறை ஊழியர்மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குறிப்பாகச் சிம்மக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இதனால், தத்தனேரி பகுதியிலிருந்து செல்லூர் செல்லும் சுரங்கப்பாதையில் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் குளம்போல் தேங்கியது. அப்பகுதி வழியாக வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். தொடர்ந்து சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை அகற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்டமனூர், அண்ணா நகர், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.