கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நமது நாடு ஒட்டுமொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60 சதவீதம், இறக்குமதியையே சார்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 385 டாலராக இருந்ததாகவும், 2025 பிப்ரவரியில் 629 டாலராக 62 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் நமது நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் 100 ரூபாய் விலை குறைப்பு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு நமது நாட்டு மக்களை பாதிக்காமல் விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 803 ரூபாயாகவே இருந்ததாகவும், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு 300 ரூபாய் மானியத்தோடு சிலிண்டர் விலை 503 ரூபாயாகவே இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503இல் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்தும்,
அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.