பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக்கூறி சென்னை மாநகராட்சியின் 189ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40ஆவது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முழுமையான விசாரணை நடத்தாமல் பதவி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உரிய விளக்கம் அளித்து கவுன்சிலர்கள் அளித்த பதிலின் அடிப்படையில் அரசு முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், கவுன்சிலர்களின் பதிலை ஆணையருக்கு அனுப்பியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விரிவான பதிலை ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தரப்பில், முதலில் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாகக் குறிப்பிட்ட அரசு, அந்த உத்தரவில் கவுன்சிலர் பதவியையும் சேர்த்துள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் 21ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.