கடந்த 2024-ஆம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில், இந்தியா ஜெர்மனியை முந்தி, உலகின் 3-வது பெரிய நாடாக மாறி உள்ளது.
புவி வெப்பமயமாதல், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, காற்று மற்றும் சூரிய சக்தி மின்சாரத்துக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான எம்பர், தகவல்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.
அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2024-ல் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் 215 டெராவாட் ஹவர்ஸ் மின்சாரத்தை இந்தியா உற்பத்தி செய்துள்ளதாகவும், இந்த உற்பத்தித்திறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிகவும் தாமதமாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும், அதிவேகத்தில் மின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி வருவதாகவும், உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.