தென்காசியில் அமைச்சர் வருகைக்காக ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் இலத்தூரில் புதிய ஆரம்பச் சுகாதார நிலைய கட்டட திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வர உள்ளார்.
இதனை முன்னிட்டு விழா ஏற்பாடு, மேடை அமைக்கும் பணிகள் என பல்வேறு செயல்பாட்டிற்காக ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இருந்தும் பத்தாயிரம் வழங்க வேண்டும் என வாய் மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. சுகாதார துணை இயக்குநர், திமுக கட்சியைச் சேர்ந்தவர் போலப் பேசுவதாகவும், அமைச்சர் வருகைக்காக தற்போது 10 ஆயிரம் கேட்பதாகவும், அடுத்து முதலமைச்சர் வருகைக்காக 20 ஆயிரம் ரூபாய் கேட்டால் என்ன செய்வது எனவும் அவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.