கணிக்கவே முடியாத நபராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார். திடீரென, சீனாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். ட்ரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம் ? இந்தியாவுக்கு என்ன லாபம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்கா தொடங்கி சர்வதேச நாடுகள் அனைத்திலும் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. உலக பொருளாதாரமே படு குழியில் விழுந்துள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம் என்றால் ? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான்.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற முழக்கத்துடன் வெற்றி பெற்று அதிபரான அவர், வந்ததில் இருந்தே அதிரடி காட்டி வருகிறார். அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் அடிப்படை வரியுடன், அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியையும் விதித்தார். ஏற்கெனவே அதிக வரி விதிக்கப்பட்டிருந்த சீனாவுக்கு கூடுதலாக 34 சதவீத வரி விதித்தார்.
பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவீத வரி விதித்த சீனா, ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் அமலுக்கு வரும் என்று அறிவித்தது. உடனடியாக சீனா மீது கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார் ட்ரம்ப். இதற்கும் சீனா பதிலடியாக, அமெரிக்கா மீது 84 சதவீத வரி விதித்துள்ளது. மேலும், 6 அமெரிக்க நிறுவனங்களை நம்பகத்தன்மையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சீனா இணைத்துள்ளது.
இதற்கும் பதிலடி கொடுத்த ட்ரம்ப், சீனாவுக்கான வரியை 104 சதவீதமாக உயர்த்தினார். இதன் மூலம், இதுவரை அமெரிக்கா சீனாவுக்கு விதித்த மொத்த வரி 125 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பு வந்த சில நாட்களில், உலகளாவிய பங்குகளில் 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் பரஸ்பர வரி குறித்து அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஹெட்ஜ் நிதி தலைவரும் ட்ரம்ப் ஆதரவாளருமான பில் அக்மேன், பரஸ்பர வரி என்பது பேராபத்தை உண்டாக்கும் பொருளாதார அணுக்குண்டு என்று கூறியிருந்தார். ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோனும், நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், சீனாவைத் தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனால், உலகளாவிய பங்குச் சந்தைகளை பெரும் பாதிப்பில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப் பட்டுள்ளது. உலக நாடுகள் அமெரிக்க வர்த்தகத் துறை, கருவூலம் மற்றும் USTR உடன் வர்த்தகம் மற்றும் நாணய கையாளுதல் தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
இந்த அவகாசம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பாக இருக்கும் என்றும், வர்த்தக ரீதியாகச் சீனா மற்றும் இந்தியா ஒன்றிணைவதற்கும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக, காலக்கெடுவை நிர்ணயித்திருக்கும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அச்சுறுத்தும் வர்த்தகப் போரை, முழுமையாகச் சீனா மீது திருப்பி இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், அண்டை நாடுகளுக்கான பணிகளுக்கு உதவவும், அந்நாடுகளுடன் இணைந்து எதிர்காலத்தைக் கட்டி எழுப்பவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் 43 சதவீத பங்கை அமெரிக்காவும்,சீனாவும் வைத்துள்ளன.இந்த இரண்டு நாடுகளும் முழுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன. அது உலக வளர்ச்சியைக் குறைப்பதோடு, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
முழுமையான சீன- அமெரிக்க வர்த்தகப்போரின் விளைவுகள் மிகவும் எதிர்மறையாக இருக்கவே வாய்ப்புள்ளதாகப் பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் கருதுகிறார்கள். அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் தற்போதைய 190 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 500 பில்லியன் டாலராக அதிகரிக்க இருநாடுகளும் இலக்கு வைத்துள்ளது.
இந்த சூழலில், இந்த 90 நாட்கள் அவகாசத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தியா தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.