தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
மாம்பழம் என்றதுமே அனைவரின் நினைவிலும் முதலில் தோன்றுவது சேலம் தான். தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உள்ளது. அதன் காரணமாகே சேலத்திற்கு மாங்கனி மாநகரம் என்ற மற்றொரு பெயரும் உணடு.
மல்கோவா, சேலம், பெங்களூரா, பங்கனபள்ளி, நடுச்சாலை, தோத்தாத்திரி, சக்கரகட்டி என பதினாறு வகையிலான மாம்பழங்களின் சீசன் தற்போது சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு நாளில் கொண்டாடப்படும் சித்திரை விசு கனி காணுதல் வைபவத்திற்காக சேலம் கடை வீதியில் மாம்பழங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சேலம் மட்டுமல்லாது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், திருச்சி மாவட்டம் துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் சேலத்திற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்களின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத நிலையிலும், அவ்வப்போது பெய்யும் மழையால் ஓரளவிற்கு மாம்பழ வரத்து அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சேலத்தில் விளையும் மாம்பழம் மட்டுமல்ல, சேலத்தில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்களுக்கும் தனி சுவை என்று சொல்லும் வகையில் மாம்பழங்களின் சுவை தனித்துவமிக்கதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கும் மாம்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுவது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.