சென்னையில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களிலிருந்து வரும் தூசிகள் காரணமாகக் காற்று மாசுபடுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனடிப்படையில் BBMP என்ற பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் காற்று மாசுபாட்டைத் தடுக்க, SUCTION SWEEPER என்ற இயந்திரத்தைச் சோதனை முறையில் பயன்படுத்தவும், அதன் செயல்திறனை மதிப்பிடவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரம் மூலம் பிரதான சாலைகளில் மனிதர்களைப் பயன்படுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் என்பதால், முதற்கட்டமாக இருபது SUCTION SWEEPER இயந்திரங்களைக் கொள்முதல் செய்யச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.