மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என பொது இடங்களில் பதாகை வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குற்றாலம் அருகே குத்தாலிங்கம் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதையும், அதேபோல் சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது இடங்களில் “இது மக்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல” என்று பதாகைகள் வைக்கும் அளவிற்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக விமர்சித்துள்ளார்.
தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு நிலை இருப்பதற்கு ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், தனிப்பட்ட பிரச்சனை, குற்றவாளிகள் கைது போன்ற Template பதில்களைக் கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றத்தை செய்யவே குற்றவாளிகள் அஞ்சி நடுங்கும் அளவிற்கு அரசின் காவல் அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதனை செய்ய நிர்வாகத் திறமை வேண்டும்; ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அது துளியும் இல்லை என விமர்சித்துள்ளார்.
குற்றவாளிகளின் கூடாரம் என்ற நிலையில் இருந்து அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு மாறுவதற்கு திமுக ஆட்சி வீழ்ந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.