வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி என்ற முதியவர், வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதால், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மனுதாரரின் பெயரானது மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் தொடர்பாக இனி புகார்கள் எழாத வண்ணம், விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். .