நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றம் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்தில் யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வில் அதிமுக செய்த துரோகத்திற்காகத் தான் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என விமர்சித்தார்
இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை காங்கிரசும், திமுகவும் கொண்டு வந்தது என்றும், அதனை தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம், இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறுவீர்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது திமுகதான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாக்குறுதி கொடுத்தது உண்மைத்தான் என்றும், திமுக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் எனவும் குறிப்பிட்டார்.