கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 2 நீதிபதிகளைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் அவ்வப்போது கூடி நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 15 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரைப் பணியிட மாற்றம் செய்வதாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி 7 நீதிபதிகளையும் தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாற்றம் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றி வரும் ஹேமந்த் சந்தங்கவுடர் மற்றும் தெலுங்கானா நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கே.சுரேந்தர் ஆகிய இரு நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்குக் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் 65 நீதிபதிகள் பணியில் உள்ள நிலையில் 2 நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டதால் நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .