கடற்படை அதிகாரி இறந்தது தெரியும் ஆனால் உயிருடன் இருப்பதாக மனைவியிடம் பொய் சொன்னதாக மீட்புப்பணியில் ஈடுபட்ட சால்வை வியாபாரி தெரிவித்துள்ளார்.
பஹல்காமைச் சேர்ந்த சால்வை வியாபாரியான சஜாத் அகமது பட், தாக்குதலின் போது காயமடைந்த ஒரு சுற்றுலாப் பயணியை சுமந்து செல்வது சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் தெரிவித்தாவது :
பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவம் குறித்து பஹல்காம் போனி சங்கத் தலைவர் அப்துல் வஹீத் வானிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தபோது வீட்டில் அமர்ந்திருந்தேன். பின்னர் அவருடன் சென்று பிற்பகல் 3,30 மணியளவில் அந்த இடத்தை அடைந்தோம்… காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றோம்.
மதத்தை விட மனிதநேயம் முக்கியம். சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினர்கள் என்பதால் அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை, எங்கள் வாழ்வாதாரம் அவர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்…
நாங்கள் எங்கள் சொந்த உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நாங்கள் அங்கு சென்றபோது, மக்கள் உதவிக்காக மன்றாடினார்கள்..சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது… அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுகிறது. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது என தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இறந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலை மீட்டதாக அகமது மேலும் கூறினார். மீட்புப் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என எங்களுக்கு அழைப்பு வந்தது. பைசரன் பள்ளத்தாக்கு மோட்டார் வாகனம் செல்ல முடியாத சாலை என்பதால், எங்கள் அனைத்து பைக்குகளையும் நாங்கள் எடுத்துச் சென்றோம்.
கடற்படை அதிகாரி (லெப்டினன்ட் வினய் நர்வால்) மற்றும் அவரது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தவன் நான்தான். வழியில் அவரது நாடித்துடிப்பை சரிபார்த்தபோது, அவர் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தேன்.
ஆனால், அவர் உயிருடன் இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் அவரது மனைவியிடம் பொய் சொன்னேன்… அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்தபோது, தொடர்ந்து அழுதேன்… இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் மீண்டும் நிகழக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம், என கூறினார்.