பஹல்காம் தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில், இந்தியாவில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலவீனமடைந்துள்ளதாகவும் சிறுபான்மையினர் கருதுவதாக தெரிவித்தார்.
அடையாளங்களைப் பார்த்துவிட்டு ஒருவரைக் கொல்வது என்பது பிரதமருக்கான செய்தி எனவும், நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்காமல், மதத்தை தொடர்புப்படுத்தி அவர் தெரிவித்த கருத்துக்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ராபர்ட் வாத்ராவின் பேச்சுக்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, பயங்கரவாத செயலை கண்டிக்காமல், அதற்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா மீதே அவர் பழி சுமத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.