பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளதால் பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கியின் பங்களிப்புடன் நடைமுறையில் இருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சிந்து நதி படுகையை நம்பி வாழும் 61 சதவீத பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தர்மேலா மற்றும் மங்ளா நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பாகிஸ்தானின் தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கோதுமை, அரிசி, கரும்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால், பாகிஸ்தானில் அதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.