பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டியளித்துள்ளார்.
அதில் , பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் ஈடுபாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்காகவும், பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலையைச் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தவறு என்றும், அதற்காக பல்வேறு துன்பங்களை பாகிஸ்தான் அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவுடன் முழுமையான போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆசிப் கூறினார்.
குறிப்பாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஹல்காம் தாக்குதல்களை பாகிஸ்தான் திட்டமிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ள நிலையில் அவரது பேட்டி வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.