பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், தமிழக பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரதப் பிரதமர் மோடி அவர்களின் “மனதின் குரல்” என்ற வானொலி நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த அறிவாலயம் அரசின் அதிகாரப் போக்கு நியாயமல்ல என தெரிவித்துள்ளார்.
திமுக-வினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்கும் திமுக அரசு, பாரதப் பிரதமர் நாட்டு மக்களோடு கலந்துரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு இத்தனைக் கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.
அதுவும் சுமார் 1000 பொதுமக்களுக்கு அறுசுவை விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழக பாஜக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. என்றும், ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகும் இறுதி தருணத்தில் அனுமதியில்லை எனக் கூறி, LED திரை, ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து நிகழ்ச்சியை வேறொரு புதிய இடத்திற்கு மாற்றியது அறிவாலய அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் திமுக அரசு குறிப்பிட்டிருந்த அந்த புதிய இடத்தில் LED திரைகள் அமைக்கப்படும் வரை ஒலிபெருக்கி மற்றும் கைப்பேசிகள் உதவியுடன் மக்களோடு மக்களாக அமர்ந்து நமது பிரதமரின் மனதின் குரல்” நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.