கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் முருகேசன், கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ம் தேதி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகி குடும்பத்தார் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, முருகேசன், கண்ணகியை வண்ணாங்குடிக்காடு மயானத்திற்குக் கடத்திச் சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்து எரித்தனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் உட்பட 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.
பின்னர் பல ஆண்டுகளாகக் கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருது பாண்டி, கந்தவேலு, ஜோதி, மணி உட்பட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு மரண தண்டனையும், உடந்தையாகச் செயல்பட்ட மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல, வழக்கைச் சரியாக விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், மருது பாண்டியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதோடு 12 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
இதில், கண்ணகியின் உறவினரான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதான்சு துலியா, குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.