விழுப்புரம் அருகே கோயிலில் வழிபாட்டிற்குச் சென்ற பட்டியலின மக்களை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 72-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த திருவிழாவின்போது, பட்டியலினத்தவர்களுக்கும், மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க வருவாய்த் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். கோயிலைத் திறக்க வேண்டி இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கோயிலைத் திறந்து அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 17-ம் தேதி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த மாற்றுச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 72-க்கும் மேற்பட்டோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.