திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மாம்பழத்தின் சீசன் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மாம்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், லிங்கன் வாடி, செந்துறை, கோபால் பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதான விவசாயமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கல்லாமை, காசா, மல்கோவா, இமாம் பசாந்த், நீளம், செந்தூரம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகைகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால், மாம்பழங்களின் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எண்ணியிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்த விளைச்சலால் இப்பகுதி விவசாயிகளுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் பிற மாநில விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் வேதனையில் தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டுமென்பதே மா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.