சிந்து மாகாணத்தில் ஆறு புதிய கால்வாய்களைக் கட்டும் அரசுக்கு எதிராக போராட்டங்களால் பாகிஸ்தான் முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கித் தவிக்கின்றன. ரயில் போக்குவரத்து போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது பாகிஸ்தானில் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒருபக்கம் ஆப்கானிஸ்தானின் தெஹ்ரீக் இ தாலிபான்கள் தாக்குதல்,மறுபக்கம் பலூச் விடுதலை ராணுவத்தினரால் தாக்குதல், எனச் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது போதாத காலம்.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளது.முக்கியமாகப் பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்தியுள்ளது. இந்தச் சுழலில்,சிந்து நதி நீரை நம்பியுள்ள பஞ்சாப் மாகாண மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் செரீப் ஆகியோர்,கடந்த பிப்ரவரியில் சோலிஸ்தான் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அப்போதிருந்தே ,அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. பசுமை பாகிஸ்தானுக்கான முன்முயற்சியாக தெற்கு பஞ்சாபில் குறைந்தது 1.2 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஆறு கால்வாய்களை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.
சோலிஸ்தான் திட்டத்தை ஒத்திவைப்பதாக,அரசு உறுதியளித்தாலும் அதை ஏற்க போராட்டக்காரர்கள் தயாராக இல்லை. சிந்துவின் பல பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் தடைப்பட்டுள்ளன. காந்த்கோட், காஷ்மோர், கோட்கி, சுக்கூர் மற்றும் கைர்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் சிக்கித் தவிக்கின்றன.
சுமார் 30,000 லாரிகள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் சாலைகளில் அப்படியே நிற்கின்றன என்றும்,10 நாட்களுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஒரு லட்சம் ஓட்டுநர்கள் நடுரோட்டில் தவிக்கின்றனர் என்றும், அனைத்து பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு லாரியில் 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு விநியோகத்துக்காகக் கொண்டு செல்லப்படும் நிலையில், இந்த போராட்டத்தால் நாட்டின் விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.
எண்ணெய் நிறுவன ஆலோசனைக் குழு (OCAC) மற்றும் பாகிஸ்தான் உர உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் குழு எனப் பாகிஸ்தானின் அனைத்து வர்த்தகம் வணிகம் மற்றும் தொழில்துறை அமைப்பினரும், இந்த போராட்டத்தால்,நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக 1000க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் நடுவழியில் சிக்கியிருப்பதால் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PTI ,PPP உள்ளிட்ட கட்சிகள், வழக்கறிஞர்கள்,வணிகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்,மட்டுமில்லாமல் ஏராளமான பொதுமக்கள், சோலிஸ்தான் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டங்களைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஒருபடி மேலே சென்று,சோலிஸ்தான் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும். இல்லையென்றால், செபாஸ் செரீப் ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்று எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் தான் பாகிஸ்தான் அரசை செபாஸ் செரீப் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.