படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக, புதிய சங்கத்தைத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி கடிதம் அனுப்பியது.
அதனைத் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் ஃபெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுநர்களால், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட்டதாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி ஃபெப்சி அமைப்பு பணியாற்ற மறுப்பது சட்டவிரோதமானது எனவும், இதன் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி முதல் படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறுமின்றி முடித்துக் கொடுக்கும்படி ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும், படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளில் தலையிட ஃபெப்சி அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு வரும் மே 7-ம் தேதிக்குள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.