முக்கிய விஐபி களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், அரசு உரியப் பாதுகாப்பு அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உலகமே தேடும் ஒரு கொடூரமான பயங்கரவாதிக்கு அரசே பாதுகாப்பு அளித்துள்ளது. யார் அந்த பயங்கரவாதி ? பாதுகாப்பு கொடுத்தது எந்த நாடு ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடி, பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ள நிலையில்,எந்த நேரத்திலும் குறிவைத்துத் தாக்கப்படலாம் என்று பாகிஸ்தான் கடும் அச்சத்தில் இருக்கிறது.
இந்தச் சூழலில், இந்தியாவால் தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தவாவின் தலைவரான பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பைப் பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான இரண்டு வழக்குகளில் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு, 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், பொதுமக்கள் நிறைந்த ஒரு அடர்த்தியான பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சயீத்தின் வீடு, தற்காலிக துணைச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐநா சபை மற்றும் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அறிவிப்பு இருந்த போதிலும், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வெளிப்படையாகவே வசதியாகவே வசித்து வருகிறார்.
ஹபீஸ் சயீத் சிறையில் இருப்பதாக, பாகிஸ்தான் திரும்பத் திரும்பக் கூறுவதற்கு முரணாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் சயீத் வசதியாக வாழ்வதை செயற்கைக்கோள் படங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பு நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் பாகிஸ்தான் சிறப்புச் சேவை பிரிவின் முன்னாள் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஆயுதமேந்திய வீரர்களும், உலகளாவிய பயங்கரவாதியின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரம்மாண்டமான கோட்டை போன்ற வீடு, ஒரு பெரிய மசூதி, பயங்கரவாதியின் செயல் அலுவலகமான ஒரு மதரஸா மற்றும் ஒரு பூங்கா ஆகியவை உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீடு அமைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ட்ரோன்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஹபீஸ் சயீத் வீடு இருக்கும் வளாகம் முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், சயீத்தின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து சாலைகளிலும், உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சி.சி.டி.வி கேமராக்களின் அனைத்து அசைவுகளையும் கண்காணிக்க, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தைப் பாகிஸ்தான் ராணுவம், 24 மணி நேரமும் பாதுகாத்து வருகிறது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான TRF பொறுப்பெற்றிருந்தாலும், ஹபீஸ் சயீத் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. பகல்காம் தாக்குதலுக்கு நடத்தியவர்கள், அதற்குக் காரணமானவர்கள், பின்னால் இருந்து இயக்கியவர்கள் என ஒவ்வொரு பயங்கரவாதியும் தேடிக் கண்டு பிடித்து வேட்டையாடப் படுவார்கள் என்றும், பயங்கரவாதிகள் பூமியில் எங்குப் பதுங்கி இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
இதன் பிறகே, எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பைப் பாகிஸ்தான் ராணுவம் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே , 2021ம் ஆண்டில் சயீத்தின் வீட்டின் அருகே ஒரு கார் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது.
கடந்த மாதம், அவரது மருமகனும், நெருங்கிய உதவியாளருமான அபு கட்டால் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பாதுகாப்பை மீண்டும் பாகிஸ்தான் இராணுவம் பலப்படுத்தியது.
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஹபீஸ் சயீத்தின் முழு பாதுகாப்பு ஏற்பாட்டையும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ கண்காணித்து வருகிறது.