சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இந்த செயற்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், சட்டமன்ற தேர்தலில் திமுக-வை வீழ்த்த பாஜக உடனான கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்,பாஜக உடனான கூட்டணிக்கு முழு ஆதரவளித்தும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக என்ற பொது எதிரியை வீழ்த்த கூட்டணி அமைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாக திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்த முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததை வரவேற்பதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.