மக்கள் நலப்பணி செய்ய விரும்பும் பெண்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா வலைதள பிரபலம் வைஷ்ணவி பாஜகவில் இணைந்து கொள்ளலாம் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் முதல்வர் சட்டமன்றத்தில் பேசும் போது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளதாக மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பேசுவதாக தெரிவித்தார்.
சமீபத்தில் ஈரோட்டில் முதியவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். முன்னதாக திருப்பூரிலும் இதே போல் சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் இதைப் பற்றி கவலைப்படாத திமுக, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதாக அவர் கூறினார்.
மத பயங்கரவாதம் தமிழகத்தில் இல்லை என முதல்வர் சட்டப்பேரவையில் கூறுகிறார். அதற்கு தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பை நான் படித்துக் காட்டினேன். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஆல்கொய்தா இயக்கங்களோடு தொடர்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.