அவசர சிகிச்சைக்கு ஆபத்பாந்தவனாக வரும் ஆம்புலன்ஸ்கள் நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து அடித்தட்டு மக்கள் வரையிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் மினி ஆம்புலன்ஸ்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அது என்ன மினி ஆம்புலன்ஸ்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!
தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. மத்திய அரசு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், மாநில அரசோ இலவச அமரர் ஊர்தி திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதன் காரணமாக ஆம்புலன்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்த தனியார் பலர் மாற்றுத் தொழில் செய்யத் தொடங்கினர். ஆனால் ஆம்புலன்ஸ் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது என்ற நிலையில் இருந்த தனியார் சிலர் புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளனர்.
108 ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்தி வாகனங்கள் ஆகியவை குறுகலான சாலை, அடுக்குமாடிக்குடியிருப்பு வீடு பகுதிகள், சந்துகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிறிய அளவிலான வாகனங்களை நாட தொடங்கி உள்ளனர்.
இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், பொது மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறிய அளவிலான ஈகோ வேன், ஆம்னி வேன் ஆகியவற்றை ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகின்றனர்.
மினி ஆம்புலன்ஸ் என அழைக்கப்படும் இந்த வாகனங்கள் 3 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை விலைக்குக் கிடைக்கின்றன. பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் டெம்போ ட்ராவலர் சுற்றுலா வாகனங்களை வாங்கி ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்ற 18 லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.
மினி ஆம்புலன்ஸ்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கிலோ மீட்டர் தொலைவு வரை இயங்குகின்றன. கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நிர்ணய கட்டணம் என்ற அடிப்படையில் ஏழாயிரம் ரூபாய் முதல், தூரத்தைக் கணக்கிட்டு 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. ஆனால் பெரிய ஆம்புலன்ஸ்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம் என்பதோடு, ஒரு கிலோமீட்டருக்கு கட்டணமாக 22 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நிர்ணய கட்டணமாகக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் தூரத்தின் அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.
இதன் காரணமாக மினி ஆம்புலன்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. சேலம் உட்படப் பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் முன்பு அதிக அளவில் மினி ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவற்றின் வருகையால் பெரிய ஆம்புலன்ஸ்களின் பயன்பாடும் குறைந்து வருகிறது.