கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாகத் தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் கோயில் அருகே குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 5 ஆண்டுகளாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், குப்பைகள் மலைபோல குவிந்து காட்சியளிப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த புஷ்பா சத்திய நாராயணா, சத்ய கோபால் அடங்கிய அமர்வு, கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது குறித்து தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டது.