நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம், விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். கடந்த மார்ச் 25-ம் தேதி விசாரணையை தொடங்கிய இந்த குழு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் மே 4-ம் தேதி அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மே 9-ம் தேதிக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. அந்த அறிக்கை தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவும் தனது தரப்பு விளக்கத்தை தலைமை நீதிபதியிடம் அளித்தார்.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவின் விளக்கம் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையை குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.